மதுரை,
மதுரை பரவை அருகே சுவாமிநாதன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (39 வயது). லாரி டிரைவர். இவருடைய மனைவி அமலா (35 வயது). இவர்களுக்கு கிஷோர் (14 வயது), அருண் (10 வயது) என்ற மகன்களும், நிவாஷிகா (12 வயது) என்ற மகளும் உள்ளனர்.
கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலைக்கு சென்ற மனைவி அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமலா கோபித்துக்கொண்டு, தனது மகன்கள், மகளுடன் பரவையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று பரவையில் உள்ள மாமனார் வீட்டுக்கு கார்த்திகேயன் சென்றார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மனைவி அமலாவின் தலையில் சுத்தியலால் அடித்துவிட்டு, கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அமலாவை, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக அமலா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.