மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை (30 வயது). இவரது மனைவி கலைச்செல்வி (27 வயது). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி வீட்டில் இருந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து 9 மாத குழந்தை இறந்து விட்டதாக கூறி, தம்பதி யாருக்கும் தெரியாமல் அங்குள்ள மயானத்தில் குழந்தையை புதைத்துள்ளனர்.
இதனிடையே குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக விட்டல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா சாப்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வருவாய்த்துறையினர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை தண்ணீரில் விழுந்து இறக்கவில்லை என்றும், தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், குழந்தையின் பெற்றோரான பாண்டிதுரை மற்றும் கலைச்செல்வியிடம் விசாரித்தனர். அப்போது பாண்டிதுரை குழந்தையை பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று பாண்டிதுரை கூறி வந்த நிலையில் குழந்தையை கொன்றதாகவும், ஆனால், இது தெரிந்தும் அந்த உண்மையை கலைச்செல்வி மறைத்ததால் அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.