வேலூர்,
குடும்ப தகராறில் காதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் பட்டாக்கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
வேலூர் சத்துவாச்சாரி சவுத்அவென்யூ சாலையை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 31). இவர், அதேபகுதியை சேர்ந்த கீர்த்திகாவை (27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஹரிபிரசாத் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் பால்பண்ணையில் இருந்து கடைகளுக்கு பால்பாக்கெட்டுகள், நெய் உள்ளிட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வினியோகம் செய்து வருகிறார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரின் பெற்றோரும் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஹரிபிரசாத் கடுமையாக மனைவியை தாக்கினார்.
இதுகுறித்து கீர்த்திகா பெற்றோருக்கு செல்போனில் கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று மகளை மட்டும் புதிதாக குடியேறிய அரப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 2 மகன்களும் தந்தையுடன் இருந்தனர்.
கீர்த்திகாவின் தாயார் விஜயா சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது கீர்த்திகா முகம், தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக உடன் வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விஜயா சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கீர்த்திகாவை அழைத்துச் சென்றார். சிகிச்சைக்கு பின்னர் இருவரும் திருமண தகவல் மைய அலுவலகத்துக்கு சென்றனர். இதற்கிடையே ஹரிபிரசாத் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்? என்று கேட்டதற்கு அவர் தாயார் பணிபுரியும் அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறிதுநேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற ஹரிபிரசாத் பட்டாக்கத்தியுடன் அலுவலகத்துக்குள் புகுந்து கீர்த்திகாவை சரமாரியாக முகம், கழுத்தில் வெட்டினார். அதனை தடுக்க முயன்ற போது அவரின் 2 கைகளின் மணிக்கட்டுகளும் துண்டாகின. ஹரிபிரசாத்தை தடுக்க முயன்ற விஜயாவின் கையிலும் கத்திவெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதைக்கண்டு விஜயா கதறி அழுதார். இதையடுத்து ஹரிபிரசாத் ரத்தம் சொட்ட பட்டாக்கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். ஹரிபிரசாத்திடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் குடும்ப தகராறு மற்றும் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை வெட்டிக்கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.