தமிழக செய்திகள்

கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்

கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள், அந்த தம்பதியை கை, கால், முகம் போன்ற இடங்களில் கடித்தன.

அரியலூர்,

கதண்டுகள் கடித்து வயதான தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 85), விவசாயி. இவரது மனைவி கனகவள்ளி (75). இவர்கள் குமணந்துறை பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் சின்னையனும், அவரது மனைவியும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் கூட்டமாக பறந்து வந்து சின்னையன் மற்றும் கனகவள்ளியை கை, கால், முகம் போன்ற இடங்களில் கடித்தன. இதில் சிறிது நேரத்தில் தம்பதி மயக்கம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னையன் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனகவள்ளி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT