மதுரை,
திருச்சியை சேர்ந்த மாணவி தனுஜா என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த சமயத்தில் நாங்கள் குடும்பத்துடன் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தோம். தற்போது திருச்சி மறுவாழ்வு முகாமில் தங்கி இருக்கிறோம். நான் நீச்சல் வீராங்கனை.
தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியை கடக்கும் வகையில் நீச்சல் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரி மனு அளித்தேன். ஆனால் எனக்கு பாஸ்போர்ட் இல்லாததால் நீச்சல் மூலம் பாக் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்க மறுத்து விட்டனர். நான் திட்டமிட்டபடி பாக் ஜலசந்தி பகுதியில் நீச்சல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.