சென்னை,
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலும், அதிருப்தியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, “ஒட்டு மொத்த அ.தி.மு.க.வினரும் த.வெ.க.வுடன் உள்ளனர். அ.தி.மு.க.வினர் ஆதரித்ததால்தான் த.வெ.க. தேர்தலில் வென்றது. அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அவர் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றார்.
தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வினர் எப்படி ஏற்பார்கள்? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து யானை பேரம் நடத்தினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் 90 சதவீதம் த.வெ.க.விற்கு வருவார்கள். கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்” என்று கூறினார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதையும் பேச கூடாது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை. அவரைப் போல் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுக்கு மாறியவர் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது. அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார். அவருக்கு நாவடக்கம் வேண்டும். அ.தி.மு.க. குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.