தமிழக செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் புளி விளைச்சல் அமோகம்: விலையும் குறைகிறது

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் புளி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 62 ஆயிரம் டன் அளவுக்கு புளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகத்தின் பங்கு மட்டும் 44 ஆயிரத்து 650 டன் ஆகும். அதுவும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து மட்டும் 15 ஆயிரம் டன் புளி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் புளி விளைச்சல் குறைந்திருந்தது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ஒரு கிலோ புளி விலையும் ரூ.150 ஆக அதிகரித்தது.

ஆனால், இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, ராயக்கோட்டை பகுதியில் புளி விளைச்சல் அமோகமாக உள்ளது. மே மாதம் கடைசி வரை புளி விளைச்சல் இருக்கும் என்பதால், இந்த ஆண்டு 60 சதவீதம் வரை உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது, ஓட்டுடன் கூடிய புளி ஒரு கிலோ ரூ.35-க்கும், ஓடு நீக்கிய புளி ரூ.50 முதல் ரூ.60 வரையும், கொட்டை நீக்கிய புளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, புளி விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது.