கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாம்பரம் - தரமணி இடையே பேருந்து சிறப்பு வழித்தடம் - போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்

புதிய பேருந்து சிறப்பு வழித்தடத்தை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுமக்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தாம்பரத்தையும், தரமணியையும் இணைக்கும் புதிய பேருந்து சிறப்பு வழித்தடத்தை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

நவீன நகர்ப்புற போக்குவரத்து வழித்தட திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, தரமணி ஆகிய முக்கிய பகுதிகள் நேரடியாக இணைக்கப்பட உள்ளன.

26.2 கி.மீ. வழித்தடம்

இதற்காக 26.2 கிலோமீட்டர் நீளமுள்ள சிறப்பு பேருந்து வழித்தடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தரமணி இணைப்பு சாலை வழியாக வேளச்சேரியை அடைந்து, அங்கிருந்து வேளச்சேரி - தாம்பரம் சாலை வழியாக தாம்பரத்துக்கும், பின்னர் தாம்பரம் - பல்லாவரத்தை இணைக்கும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக பல்லாவரத்துக்கும் இந்த வழித்தடம் செல்லும்.

இந்த வழித்தடம், நவீன நகர்ப்புற போக்குவரத்து திட்டத்தின் முதற்கட்டத்தில் அமைக்கப்பட்ட பல்லாவரம், துரைப்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை இணைப்புடன் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தென்சென்னை பகுதிகளில் பேருந்து போக்குவரத்து இணைப்பு மேலும் மேம்படும்.

பசுமை நடுவங்கள்

இந்த சிறப்பு வழித்தடத்தில் சீரான இருவழிச்சாலைகள் அமைக்கப்படுவதுடன், சாலையின் நடுவே செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டு பசுமை நடுவங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், நெடுஞ்சாலைகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.

சிறப்பு ஏற்பாடு

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பேருந்துகள் தடையின்றி செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஐ.டி. நிறுவனங்களுக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு இந்த புதிய வழித்தடம் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT