தமிழக செய்திகள்

3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து; அன்றைய தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளவில்லை - வி.சி.க.

விமர்சனங்கள் வந்த பிறகும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது என வி.சி.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்று இருக்கிறார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பதவியேற்பு விழாவின்போது முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய பாடல்கள் பாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3-வதாக பாடப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே தொடக்கத்தில் பாடப்படும். நிகழ்ச்சி நிறைவின்போது தேசிய கீதம் பாடுவதுதான் மரபு.

இதற்கு முன்பு கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி அதை மாற்ற வலியுறுத்தியபோது கூட அன்றைய தி.மு.க. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் விஜய் பதவி ஏற்கும் விழாவின்போதும், தற்காலிக சபாநாயகராக கருப்பையாவை தேர்வு செய்கின்ற நிகழ்வின்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுகிறது.

விமர்சனங்கள் வந்த பிறகும் அதை மாற்றிக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவ்வாறு வந்தே மாதரம், தேசியகீதம் பாடப்பட்டு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது கண்டனத்திற்குரியது.” என வி.சி.க. தெரிவித்துள்ளது.