சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலை பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம், முதல்-அமைச்சர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதியால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம், தமிழக முதல்-அமைச்சர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது, வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.
இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.