சென்னை,
ஆரம்ப சுகாதார நிலைய ஐசிடிசி பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். சென்னையில் வரும் 7 ஆம் தேதி காலை , தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.பூமிநாத பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஐசிடிசி பணியாளர்களுக்கும், ஐசிடிசி கவுன்சலர்களுக்கும், லேப் டெக்னீசியன்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அடிப்படை ஊதிய உயர்வை வழங்கி உள்ளன. இந்த ஊதிய உயர்வை 01 .05.2026 முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் .
ஆனால், இதுவரை நடைமுறை படுத்தவில்லை. எனவே, அந்த அடிப்படை ஊதிய உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும். பிரதி மாதம் 1 ஆம் தேதி ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கம் சார்பாக வரும் 7 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் ,ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை பின்புறம் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சி.மார்க்கரெட் கலையரசி தலைமை தாங்குகிறார் . தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுகிறார் .
சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பூமிநாதபாண்டியன், தமிழ்நாடு என்எச்எம் பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் என்.டி.ஆர்.ராஜதுரை,பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.காளிதாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றுகின்றனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான ஜி.ஆர்.இரவீந்திரநாத் நிறைவு உரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.