தமிழக செய்திகள்

தமிழ்நாடு இயங்குபடம், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026: முதல்-அமைச்சர் வெளியிட்டார்

தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026-ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.03.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் “தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை (Tamil Nadu AVGC-XR Policy) 2026”-ஐ (Animation, Visual Effects, Gaming, Comics and Extended Reality) வெளியிட்டார்.

தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026 முக்கிய அம்சங்கள்

பொருளாதார நோக்கம் - தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் AVGC-XR சந்தையில் 20 சதவிகித பங்கைப் பெறவும், 2030-ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சம் உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கிடப்பட்டுள்ளது.

எல்காட் - வியன் AVGC-XR சிறப்புத்திறன் மையங்கள் (ELCOT Viyan AVGC-XR Centre of Excellence) - சென்னை நகரில் எல்காட் வியன் சிறப்புத்திறன் மையம் (CoE Hub) நிறுவப்படுவதுடன், அதன் துணை மையங்கள் (CoE Spokes) கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் உடன் இணைந்து அமைக்கப்படும்.

ஆயத்த கட்டமைப்பு வசதிகள் - இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ள TIDEL NEO பூங்காக்களில் Plug-and-Play கட்டமைப்புகள் AVGC-XR ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி, பரவலான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திறன் மேம்பாடு – 300 முதல் 400 கல்லூரிகளில் AVGC-XR பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி மற்றும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்.

கேமிங் வகைப்படுத்தல் சீர்திருத்தம் - ஆன்லைன் வீடியோ / சமூக விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகள் ஆகியவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் வகையில் தேசிய தொழில் வகைப்பாடு (National Industrial Classification) மாற்றம் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

ஸ்டார்ட்அப் ஆதரவு - AVGC-XR ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொடக்கநிலை நிதி, வழிகாட்டுதல் மற்றும் வளர்ப்பு (Incubation) ஆதரவு வழங்கப்படும்.

அறிவுசார் சொத்து (IP) மற்றும் ஆராய்ச்சி முன்னணி - 2030 ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் உருவாகும் மூல உள்ளடக்கம் மற்றும் ஆராய்ச்சி புதுமைகளில் 20 சதவிகித பங்கைப் பெறும் இலக்குடன், ‘இந்தியாவின் அறிவுசார் சொத்து (IP) தலைநகரமாக’ தமிழ்நாட்டை உருவாக்க இலக்கிடப்பட்டுள்ளது.

முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல் - AVGC-XR தொழில் நிறுவனங்கள் தொடர்பு, சந்தை அணுகல், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து துறைசார் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக எல்காட் நிறுவனத்தில் ஒரு சிறப்பு வழிகாட்டுதல் மையம் (ELCOT AVGC XR Facilitation Desk) செயல்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.