தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்; காலை 9 மணியளவில் 17.69 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்திலேயே முதல் நபராக நடிகர் அஜித்குமார் காலையில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் தமிழகத்தில், தேர்தல் தொடர்பான விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை பார்வையிட 10 நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட சர்வதேச குழு ஒன்று சென்னைக்கு வருகை தந்துள்ளது. இதனை தொடர்ந்து, காலை 9 மணியளவில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில், காலையில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் தன்னுடைய வாக்கை செலுத்தினார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வாக்குகளை செலுத்தினர்.

இதனையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடனும் வருகை தந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தி சென்றுள்ளனர். தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த வாக்காளர்கள், பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.