சென்னை,
ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு, முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:-
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.