தமிழக செய்திகள்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!

சுய விளம்பரம்

டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடக செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆளும் அரசு உணர வேண்டும்

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதை பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளை கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல.

அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள்

எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள் (“More Choices, More chances”)

கைவிட வேண்டும்!

எனவே, ஒருவேளை முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளை குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.