தமிழக செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட்: 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய் பதவி ஏற்றபின் முதன்முதலாக தமிழக சட்டசபை கடந்த மாதம் 18–ந் தேதி கூடியது. கவர்னர் உரை நிகழ்த்தினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்ஜெட்

தவெக சாா்பில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகள் அதில் அறிவிப்பாக வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்ந்த ஆலோசனைகள் நடைபெற்றன.

இதில் அமைச்சா் செங்கோட்டையன், நிதியமைச்சா் மரிய வில்சன், உணவுத்துறை அமைச்சா் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் மற்றும் துறைசாா்ந்த செயலா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் தற்போதைய நிதிநிலையில் செயல்படுத்த சாத்தியமுள்ள அறிவிப்புகள்,குறுகிய காலம் மற்றும் நீண்ட கால திட்டங்கள், நிலுவையில் வைக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

2-வது நாள் ஆலோசனை

இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு குறித்து 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 22-ம் தேதி வரை துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.