கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்; காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அறிவிப்பு

அவர்கள் இருவரும் அமைச்சர்களாவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து உள்ளனர்.

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், முதலில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர் முயற்சியின் பலனாக, சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. இதில், ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அறிவித்தன.

த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்த நிலையில், அதனடிப்படையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இதில், ஏற்கனவே கூறியபடி தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன்படி அக்கட்சி சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அவர்கள் இருவரும் அமைச்சர்களாவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். இதன்படி நாளை அவர்கள் இருவரும் பதவியேற்பார்கள் என தகவல் தெரிவிக்கின்றது.