தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை 3 நாட்களில் விரிவாக்கம்: கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை இடமா?

முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.

அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும். கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார்.

அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.