சென்னை,
குழந்தைகள் தின விழாவிற்கு அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'கேக்' வழங்க 4 நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவிற்காக, பள்ளி மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ள கேக்குகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் 4 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
பிரிட்டானியா நிறுவனத்திற்கு 10 லட்சத்து 3 ஆயிரத்து 996 கேக்குகள் வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 478.97 ஆகும். இந்நிறுவனம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கேக்குகளை வினியோகம் செய்ய வேண்டும்.
ட்ரீம் பேக் நிறுவனத்திற்கு 33 லட்சத்து 87 ஆயிரத்து 459 கேக்குகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 84 லட்சத்து 13 ஆயிரத்து 785 ஆகும். இந்நிறுவனம் அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, தேனி, திருப்பத்தூர், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்க வேண்டும்.
எலைட் நேச்சுரல் நிறுவனத்திற்கு 10 லட்சத்து 6 ஆயிரத்து 861 கேக்குகள் வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 17 ஆயிரத்து 804 ஆகும். இந்நிறுவனம், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்க வேண்டும்.
ஐ.டி.சி நிறுவனத்திற்கு 8 லட்சத்து 48 ஆயிரத்து 96 கேக்குகள் வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 7 லட்சத்து 71 ஆயிரத்து 498 ஆகும். இந்த நிறுவனம், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்க வேண்டும்.
இந்த கேக்குகள் அனைத்தும் 45 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும் என்றும், தரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேக் வினியோகத்தை நவம்பர் 9-ந்தேதி தொடங்கி, நவம்பர் 11-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அக்டோபர் 26-ந்தேதி முதல் நிறுவனங்களின் வளாகத்தில் தரத்தை ஆய்வு செய்யும் உரிமையைக் கொண்டுள்ளது. ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.