சென்னை,
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்ச விஜய் இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 8 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 17 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல்துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஈரோடு அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், சென்னை மாவட்டம், கொத்தவால் சாவடியில் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 1 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் என மொத்தம் 4 காவல் நிலையங்கள்;
திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் 82 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம் என மொத்தம் 8 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை தெற்கு மாவட்டம், மேடவாக்கத்தில் 3 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிலும், வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் என மொத்தம் 8 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.