சென்னை,
மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக வெற்றிக்கழகம் - காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராகுல் காந்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இது மிக முக்கியமான தருணம். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.
ஒவ்வொரு கட்சியையும் உடைத்து எப்படியாவது மெஜாரிட்டி எடுத்துட்டு வந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் திணித்து மாநிலங்களின் உரிமையை பறிக்க வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. அதை நாம தீவிரமாக தடுக்க வேண்டும். அதற்கு தேவையானதுபாராளுமன்றத்தில் ஒரு குரல். துணிச்சலாக ஒரு குரல். புரிதலோடு ஒரு குரல் தமிழ்நாட்டு சார்பாக ஓங்க வேண்டும் . அந்த குரலாக நான் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்கிறோம். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழக மக்களுக்காவே தமிழக காங்கிரஸ் நிற்கும். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்றார்.