சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ்குமார் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பரிந்துரையின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு திராவிட இயக்கங்களோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டாலும் ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலை இருந்தபோதும் இன்றைக்கு த.வெ.க. ஆட்சியில் பங்கு வகித்து இரண்டு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் தாங்கள் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். தமிழக வரலாற்றில் 60 ஆண்டுகளில் இல்லாத புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கிற அற்புதமான வாய்ப்பு காங்கிரஸ் தலைமை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், காங்கிரஸ் கட்சியை மேலும் வலிமைப்படுத்தி தமிழகத்தில் வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற மகத்தான பணியை ஆற்ற வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்வதன் மூலமாக நீண்ட நெடுங்காலமாக கடந்த பல்வேறு தேர்தல்களில் நேரு பாரம்பரியத் தலைமைக்கு ஆதரவாக காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில், தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு பேராதரவு வழங்க தயாராக இருக்கிறது. அவருக்கு வழங்கப்படுகிற ஆதரவை வாக்குகளாக மாற்றி 2029 தேர்தலில் நாற்பதும் நமதே என்கிற இலக்கோடு தங்கள் தலைமையில் வெற்றிகாண இக்கூட்டம் தங்களை மீண்டும் வாழ்த்தி உங்களது நியமனத்தை வரவேற்கிறது. உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் முடிய இருக்கிறது. இந்த குறுகிய காலத்திற்குள் "தமிழ்நாட்டின் அதிசயம்" என்று சொல்லும் அளவுக்கு பல சாதனைகளை த.வெ.க. அரசு படைத்திருக்கிறது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்கு, ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்பட்டன. விஜய் நினைத்திருந்தால், அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற்று எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அ.தி.மு.க.வோடு இணைந்து ஆட்சி அமைத்தால் அது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். அதனால், மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார். இதிலிருந்து அவரது கொள்கை உறுதி, தெளிவான அரசியல் பாதையை நாம் அறிய முடிகிறது.
கடந்த தி.மு.க. அரசு பெரும் கடன் சுமையை ஏற்படுத்தி இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் செயல்படுத்தி வருகிறார். 200 யூனிட் இலவச மின்சாரம், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கை, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தொலைநோக்குப் பார்வையுடன் சிறப்பு திட்டங்கள் என்று அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் எடுத்து வருகிறார்.
ஒரு பக்கம் தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ள கடன் சுமை, அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகள், மற்றொருபுறம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு என்ற இரட்டை தாக்குதல்களை எதிர்கொண்டு, இரண்டு மாதங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காமராஜர், எம்.ஜி.ஆர். போன்று தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக முதலமைச்சர் உருவெடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு நிர்வாகத்திற்குப் புதியவராக இருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றியையும், பாராட்டையும், வாழ்த்துகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.
எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.