சென்னை,
“திறன்களின் ஒலிம்பிக்ஸ்” (Olympics of Skills) என்று அழைக்கப்படும் உலகத் திறன் போட்டிகள் (World Skills Competition), தொழில் மற்றும் தொழில்நுட்பத் திறன் பிரிவுகளில் உலகின் உயரிய சர்வதேசப் போட்டியாகக் கருதப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், உலகெங்கிலும் உள்ள திறன்மிக்க இளைஞர்கள் தங்களது திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
தமிழ்நாட்டின் சர்வதேசத் திறன் போட்டிப் பயணத்தில் World Skills 2022 Special Edition முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவ்வாண்டு இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 போட்டியாளர்கள், 1 வெண்கலப் பதக்கமும், 2 Medallions of Excellence விருதுகளும் பெற்றனர். தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடைபெற்ற World Skills 2024 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போட்டியாளர்கள் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கிடைத்த அனுபவங்கள், மாநிலத்தில் திறன் போட்டிகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அடித்தளமாக அமைந்தன.
இதன் தொடர்ச்சியாக, திறமையான இளைஞர்களை கண்டறிந்து, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்தும் நோக்கில் “தமிழ்நாடு திறன் போட்டி” முன்னெடுக்கப்பட்டது. இப்போட்டிகள் போட்டியாளர் பதிவில் தொடங்கி, மாவட்ட அளவிலான போட்டிகள் (நிலை–1), மண்டல அளவிலான போட்டிகள் (நிலை–2) மற்றும் மாநில அளவிலான போட்டிகள் எனப் படிநிலைகளைக் கொண்டுள்ளன. மாநில அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், தொடர்ந்து இந்தியா ஸ்கில்ஸ் பிராந்திய, தேசிய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இம்முயற்சியின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 53,273 போட்டியாளர்கள் பதிவு செய்தனர். மாநில அளவிலான போட்டிகளின் மூலம் 63 திறன் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்கள் இந்தியா ஸ்கில்ஸ் தென் மண்டலப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற India Skills 2026 பிராந்தியப் போட்டிகளில் தமிழ்நாடு 108 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தேசிய அளவிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா ஸ்கில்ஸ் தேசியப் போட்டிகளில் 2021-இல் 23 பதக்கங்களுடன் 10-ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2024-இல் 40 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தையும், 2026-இல் 46 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
சர்வதேச அளவிலும் தமிழ்நாட்டின் போட்டியாளர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளனர். தைவானில் நடைபெற்ற WorldSkills Asia 2026 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போட்டியாளர்கள் பங்கேற்று 2 பதக்கங்களை வென்றனர். அதேபோல், தைவானில் நடைபெற்ற Taipei Capital Cup 2026 போட்டியில் இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 5 போட்டியாளர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் வெள்ளிப் பதக்கமும், இருவர் Merit Awards விருதுகளும் பெற்றனர்.
இச்சாதனைகளின் தொடர்ச்சியாக, 22.09.2026 முதல் 27.09.2026 வரை ஷாங்காயில் நடைபெற்ற WorldSkills 2026 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் பல்வேறு திறன் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர். இவர்களில் 5 போட்டியாளர்கள் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 4 Medals for Excellence விருதுகளை வென்றனர். உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாடு வென்ற முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
WorldSkills Shanghai 2026-இல் பதக்கம் வென்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
1 முகம்மது சலாம் Z Dental Prosthetics Silver
2 ராகுல் K B Intelligent Security Technology Medal for Excellence
3 அர்ஜுன் S. V Mobile Applications Development Medal for Excellence
4 சுரேந்திரன் Plastering and Drywall Systems Medal for Excellence
5 ஜாய் தாஸ் Jewellery Medal for Excellence
ஷாங்காயில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி மொத்தம் 6 வெள்ளிப் பதக்கங்களையும் 20 Medals for Excellence விருதுகளையும் வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள மிக அதிகமான பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் உலகத் தரவரிசையில் இந்தியா 10-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகத் திறன் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா பெற்றுள்ள மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலிருந்து திறமையான போட்டியாளர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தென் மண்டல, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்தும் தமிழ்நாட்டின் தொடர் முயற்சிகள் இச்சாதனைகளின் மூலம் வெளிப்படுகின்றன. உலகளவில் போட்டியிடக்கூடிய திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் பயணத்தில், WorldSkills Shanghai 2026 போட்டியில் தமிழ்நாடு பெற்றுள்ள முதல் வெள்ளிப் பதக்கம் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.