தமிழக செய்திகள்

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

டெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகள் 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தியப்பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா - 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 528 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் மசோதாக்களுக்கு 298 பேர் ஆதரவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு ஆதரவு அதாவது 352 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 298 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

இந்நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.