தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் 
தமிழக செய்திகள்

3 வருட வழக்கிற்கு 3 மாதங்களில் தீர்வு கண்ட சிபிசிஐடி குழுவிற்கு தமிழக டிஜிபி பாராட்டு

சிபிசிஐடி, சட்டப்பூர்வமான 90 நாட்கள் காலக்கெடுவிற்குள் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சென்னை,

3 வருட வழக்கிற்கு 3 மாதங்களில் தீர்வு கண்ட சிபிசிஐடி குழுவிற்கு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குற்றப்பத்திரிகை தாக்கல்

மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த காணாமல் போன நபர் குறித்த வழக்கை மூன்றே மாதங்களில் கொலை வழக்காக கண்டறிந்த சிபிசிஐடி 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் ஸ்ரீகாந்த் என்பவர் 07.09.2023 அன்று காணாமல் போனது தொடர்பாக, தேனி காவல் நிலையத்தில் 09.09.2023 அன்று காணாமல் போன நபர் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாகியும் காணாமல் போன நபரை கண்டறிய முடியவில்லை.

கொலை வழக்கு

ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 07.04.2026 அன்று தேனி சிபிசிஐடி குற்ற எண் 01/2026 ஆக மறுபதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி மேற்கொண்ட தீவிரமான மற்றும் தொடர் விசாரணையின் மூலம் மூன்று மாதங்களுக்குள். ஜூலை 2026-இல் இவ்வழக்கு கொலை வழக்கு என்பது கண்டறியப்பட்டது.

3 பேர் கைது

இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் முறையாகச் சேகரிக்கப்பட்டன. தொடர்புடைய சான்றுகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதுடன். தடய அறிவியல் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

பி.ஆர்.சி. எண் வழங்கப்பட்டது

விரைவான மற்றும் திறமையான விசாரணையை மேற்கொண்டு. சிபிசிஐடி 05.10.2026 அன்று, சட்டப்பூர்வமான 90 நாட்கள் காலக்கெடுவிற்குள் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, 09.10.2026 அன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் முதற்கட்ட விசாரணை பதிவெண் (P.R.C. எண்) வழங்கப்பட்டது.

மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு

தீர்க்கமான புலனாய்வுத்திறன், முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை கண்டறிந்து, உரிய காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிசிஐடி. காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், சிறப்பான முறையில் புலனாய்வு செய்த குழுவினரை பாராட்டினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT