சென்னை,
நான்கு மண்டலங்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ம் அணியினரை கொண்ட தெற்கு மண்டலம் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான CBRN (Chemical, Biological, Radiological, and Nuclear emergency response capabilities among State Disaster Response Forces Competition for the year 2026) போட்டி, உத்திரபிரதேசம். காஜியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது பட்டாலியனில் 02.11.2026 முதல் 04.11.2026 வரை நடைபெற்றது.
இதில், மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த த.சி.கா. (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) 13-ம் அணியை சார்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை (TNDRF) அணியினர், தெற்கு மண்டலம் சார்பாக பங்கேற்றனர். இப்போட்டியில் கலந்து கொண்ட நான்கு மண்டலங்களில் த.சி.கா 13-ம் அணியினரைக் கொண்ட தெற்கு மண்டலம் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதே தமிழக அணியானது கடந்த ஆண்டும் (2025) அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் அகில இந்திய அளவிலான 27-வது காவல்துறை வாத்தியக் குழு போட்டி 2026-2027, Group Centre, CRPF, ரங்காரெட்டி, செகந்திராபாத், தெலுங்கானா மாநிலத்தில் 16.11.2026 முதல் 20.11.2026 வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு காவல்துறை சார்பாக பங்கேற்ற தமிழக காவல்துறை வாத்திய இசைக்குழுவினர், ஆண்கள் பிரிவினருக்கான Bugle Call போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். இப்போட்டியில் CISF, SSB, CRPF உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படை வாத்திய இசைக்குழுவினரும். மாநில காவல்துறை வாத்திய இசைக்குழுவினரும் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 26.11.2026 இன்று நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல்துறை இயக்குநர், ஆயுதப்படை, முனைவர் R. தினகரன், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, தா. ச. அன்பு இ.கா.ப., மற்றும் காவல் கண்காணிப்பாளர்/தளவாய், த.சி.கா படைப்பயிற்சி மையம் ச.விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.