தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று 34 'ஹார்டு டிஸ்க்குகளையும்' மீட்டனர்.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 'ஹார்டு டிஸ்க்குகள்' திருட்டுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெரிய சதி திட்டம் இருப்பதாகவும், முக்கியமான தகவல்களை அழிப்ப தற்காக இந்த 'ஹார்டு டிஸ்க்குகள்' திரு டப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளும், குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியராக பணியாற்றி வந்த கோபிநாத் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கம்ப்யூட்டர் 'ஹார்டு டிஸ்க்குகளை' திருடி, பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று 34 'ஹார்டு டிஸ்க்குகளையும்' மீட்டனர். கைது செய்யப்பட்ட கோபிநாத், அரகோணம் அருகே உள்ள வளர்புரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த 1 ஆண்டுக்கு முன்புதான் சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அவரை சென்னை எழும்பூர் கோர்ட் டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வரும் 19-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 'ஹார்டு டிஸ்க்குகளை' வாங்கிய பெங்களூரு கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் முரளி மனோகர் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும், விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலில் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் போலீசார் கூறினார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை, டிஜிபியிடம் பரிந்துரை செய்ததன்பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.