சென்னை,
உலக மீனவர் தினத்தையொட்டி, தமிழக மீனவர்களின் கடல் உரிமையை மீட்டெடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உலகின் தலைசிறந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவான மீன் உணவினை மனிதர் யாவர்க்கும் பெற்றுத்தரத் தங்கள் இன்னுயிரைப் பணயமாக வைத்து, பெரும்பணி புரிபவர்கள் தொல்குடி மீனவ மக்களாவார். அதிலும் உலகின் முதல் மாந்த இனமான தமிழ்ப்பேரினத்தில் பிறந்த மீனவ மக்களுக்கு நீண்ட பெரும் வரலாறும், வாழ்வியலும் உண்டு.
ஆர்ப்பரிக்கும் அலைகடல் மீது முட்டிமோதி, கை வலிக்க, கண் நோக கலம் செலுத்தி, கடல் சீற்றம், புயல், மழை என இயற்கைப் பேரிடர்கள் யாவையும் தாங்கி, ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்லும் உலகில் எல்லா மீனவர்களும் தங்கள் உயிரை விலையாக வைத்தே மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், தமிழ் மீனவர்களுக்கு மட்டும்தான் இயற்கை பேரிடர்களையும் தாண்டி, இலங்கை கடற்படையின் இனவெறிக்குப் பலியாகும் பேராபத்தும் உள்ளதெனத் தெரிந்தும், அதையும் எதிர்கொள்ளத் துணிந்தே கடலுக்குச் செல்ல வேண்டிய பெருங்கொடுமையான நிலையுள்ளது. பெருமைமிகு தமிழ் மீனவர்கள், இன்றைக்கு மீன்பிடித்தொழிலையே முற்றாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீன்களைக் கடலில் கொட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, வலைகள் அறுக்கப்பட்டு, படகுகள் பறிக்கப்பட்டு தமிழனாய் பிறந்துவிட்டதற்காக எம் மீனவச்சொந்தங்கள் இலங்கை கடற்படையால் படும் இன்னல்கள் வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல.
அத்தகு துயர் நிலை நீங்கி நம் மீனவ மக்கள் தமிழர் கடல் மீதான தங்களின் முழு உரிமையும் மீளப்பெற்று, கடல் தாயின் செல்லப்பிள்ளைகளாக வாழ்வும் வளமும் பெற்று நலமாய் வாழ்ந்து மக்களுக்கு மீன் உணவினை வாரி வழங்கிட உலக மீனவர் நாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.