சென்னை,
தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தின் மூலம், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற உள்ளன. இதற்கான பயனாளிகள் பட்டியலை தமிழக அரசு தயாரித்து வருகிறது.
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 6 இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான பயனாளிகளின் பட்டியலை தமிழக அரசு தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 பெறுவோர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ஆகியோரின் விவரங்களின் அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைய உள்ளன.
தமிழகத்தில் தற்போது 2.40 கோடி வீட்டு சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது. அவற்றில் 42 லட்சம் இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை.
இதுகுறித்து தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "இலவச கேஸ் சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் பயனாளிகள் விவரங்களின் அடிப்படையில், இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், அனைத்து குடும்பத்தினரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையிலும் பயனாளிகளைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.