சென்னை,
பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனத்திற்கு கட்டண நிர்ணயம் செய்துள்ளாதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device – VLTD) தொடர்பாக, பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வாகன உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் 13.07.2026 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட VLTD உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, AIS-140 தரநிலைக்கு இணங்க வழங்கப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மற்றும் நியாயமான விலையில் விற்கப்படுவதுடன், வாகன உரிமையாளர்களுக்கு வெளிப்படையான, தரமான மற்றும் நம்பகமான சேவை கிடைப்பது உறுதி செய்வதற்கு இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் விவாதிக்கப்பட்டது
(i) வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device – VLTD)ஒரு ஆண்டு சந்தாவுடன் மற்றும் 2 SIM அட்டைகளுடன் ரூ.5,099/- + GSTக்கு மிகாமல்
(ii) கூடுதலாக (Additional / Replacement) வழங்கப்படும் ஒவ்வொரு Panic Button-க்கும் ரூ.150/- + GSTக்கு மிகாமல்
தமிழ்நாட்டில் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும். இதற்கு உற்பத்தியாளர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டார்கள்.