சென்னை,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
உலகத் திறன் போட்டிகள் – ஐச்சி, ஜப்பான் 2028-ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்கள் பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்ததுடன், உலகத் திறன் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
இப்போட்டி மூலம் இளைஞர்கள் தங்களின் தொழில்திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. மாவட்ட, மாநில, மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு உலகத் திறன் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும்.
16 முதல் 25 வயதுக்குட்பட்ட (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும்) மாணவர்கள், தொழிற்பயிற்சி பெறுவோர் மற்றும் இளம் தொழில்முனைவோர் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 60-க்கும் மேற்பட்ட தொழில்திறன் பிரிவுகளில் போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியான தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் https://www.skillindiadigital.gov.in/india-skills-competition இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், தொழிற்பயிற்சி பெறுவோர், மற்றும் திறன்மிக்க இளைஞர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி அதிக அளவில் பதிவு செய்து பங்கேற்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.