சென்னை,
'ஆட்சி' மாறினால் 'காட்சி' மாறும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே வாக்களித்த மக்களிடம் உண்டு. அதுபோன்ற எதிர்பார்ப்பில்தான் த.வெ.க. கையில் ஆட்சியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை தாண்டி உள்ளநிலையில், தங்களுடைய அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக, கடந்த ஜூலையில் மட்டும் ரூ.12,044 கோடி, தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வரி வாயிலாகவும், வரி அல்லாத பிற வகையிலும் வருவாய் கிடைக்கிறது. அதன்படி மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் விற்பனை, விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரி பகிர்வு, இதர வரிகள் மற்றும் தீர்வை வாயிலாக, வரி வருவாயும், மத்திய அரசின் மானியம் போன்ற வகையில் வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய் ரூ.89,718 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வரி விதிப்புகள் வாயிலாக கிடைத்த வருவாய் ரூ.82,566 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.4,070 கோடி, மத்திய மானியம் ரூ.3,082 கோடியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை மொத்த செலவு ரூ.1.23 லட்சம் கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.25,267 கோடி. மொத்த செலவில் அதிக அளவாக ஏற்கனவே வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி செலவு ரூ.21,176 கோடியாகவும், ஓய்வூதியத்திற்கான செலவு ரூ.17,237 கோடியாகவும் உள்ளன.
வரவை விட செலவு அதிகம் இருப்பதால் அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவை மேற்கொள்ள கடன் வாங்குகிறது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட்டும், பல்வேறு வங்கிகளிடம் இருந்தும் கடன் வாங்கப்படுகின்றன.
இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட கடன் ரூ.32,925 கோடியாக உள்ளது. இது ஜூன் மாத நிலவரப்படி ரூ.20,881 கோடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12,044 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய் ரூ.85,876 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தன. இந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன் ரூ.30,956 கோடியாக இருந்தது.