சென்னை,
கூட்டுறவு துறையின் மூலம் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் நாபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் 03.09.2026 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள TUCS நியாயவிலை கடையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். கூட்டுறவு துறையின் 8,914 நகர்ப்புற நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35/- என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, நாபெட் நிறுவனத்தின் மூலம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து 65 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 949.44 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 922.92 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 97 ஆகும்.
இரண்டாம் கட்டமாக, நாபெட் மூலம் 1,414.33 மெட்ரிக் டன்னும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 460 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 848.31 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 811.26 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 96 ஆகும்.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் தேவை மற்றும் வரவேற்பை கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக சுமார் 700 மெட்ரிக் டன் வெங்காயம் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700.19 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 646.14 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 92 ஆகும்.
இவ்வாறு, மூன்று கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாயவிலைக் கடைகள் மூலம் இதுவரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரப்பெற்ற வெங்காயம் அனைத்தும் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டது. ரேசன் கடைகள் மூலம் வெங்காய விற்பனை தற்போது நடைபெறவில்லை.
நாபெட் நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29/- வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆணை வழங்கியிருந்தது. இக்கொள்முதலுக்கான வெங்காயம் 'ஏ' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மராட்டியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 'ஏ' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்பு தர வெங்காயங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை 31.10.2026 அன்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. அத்துடன், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் 31.10.2026 அன்றே நாபெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக்கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்தது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் நாபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல.
தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகர்வோர் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.