தமிழக செய்திகள்

நகர்ப்புறங்களில் 1 கோடி மரங்களுக்கு ‘டிஜிட்டல் ஆதார்’- தமிழக அரசு முடிவு

ஒவ்வொரு மரத்திற்கும் டிஜிட்டல் ஆதார் வழங்கி பாதுகாக்கும் வகையில் நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0 என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

சென்னை,

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் ஆதார் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மரங்களுக்கு டிஜிட்டல் ஆதார்

இயற்கை நமக்கு வழங்கிய கொடைகளில் மிக முக்கியமானவை மரங்கள். அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் மரங்களின் தேவையை செயற்கையாக பூர்த்தி செய்ய முடியாது. சாலைகள், வீட்டு வசதி மற்றும் நகர விரிவாக்கம், தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன.

மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மரங்களின் தேவையை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள சுமார் ஒரு கோடி மரங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு மரத்திற்கும் டிஜிட்டல் ஆதார் (பிரத்யேக அடையாள எண்) வழங்கி பாதுகாக்கும் வகையில் நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0 என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

டெண்டர் அறிவிப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் இதனை செயல்படுத்தும் வகையில் அதற்கான டெண்டர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை போன்ற பெருநகரங்களில் வெயில் அதிகரிக்க மரங்கள் இல்லாதது தான் காரணம். எங்கே மரம் இல்லை, எங்கே நட வேண்டும் என்பதை கண்டறிய இந்த கணக்கெடுப்பு அவசியம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மரங்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பது போன்றவற்றை இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் கணக்கில் இருக்கும் மரம் காணாமல் போனால் உடனே அதிகாரிக்கு தகவல் போய்விடும்.

முன்கூட்டியே அறியலாம்

புயல், மழையின்போது எந்த மரம் விழும் அபாயத்தில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறியலாம். நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0 என்ற சாப்ட்வேர் மூலம் அரசால் கணக்கெடுக்கப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் டிஜிட்டல் ஆதார் வழங்கி அந்த மரம் அமைந்திருக்கும் இடம், புகைப்படம், மரத்தின் பெயர், உத்தேச வயது, உயரம், குறிப்பிட்ட அந்த மரத்தால் கிடைக்கும் பயன்கள் என அனைத்தும் பதிவு செய்யப்படும்.

1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் ஆதார்

பொதுமக்கள் தங்கள் தெருவில் உள்ள மரம் வெட்டப்பட்டால், புகைப்படம் எடுத்து சாப்ட்வேர் நிறுவனத்தின் செயலியில் பதிவேற்றினால் உடனே சம்பந்தப்பட்ட நகர்ப்புற அதிகாரிகளுக்கு தகவல் சென்றுவிடும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் ஆதார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் பாதுகாப்பில்...

இந்த திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதியான சாப்ட்வேர் நிறுவனங்கள் வருகிற 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மரமும் அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT