தஞ்சை,
தஞ்சையில் ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர்
அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி கொடுத்திருக்கிறாரே?
பதில்:- ஒருவர் சொன்ன கருத்து குறித்து ஆதரித்தோ, மறுத்தோ பேசும் வழக்கம் எனக்கு இல்லை. சமூக நீதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்-அமைச்சர் ஜோசப்விஜய் ஆட்சியை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் விருப்பத்தை அப்படித்தான் நான் தெரிவிக்கிறேன். பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசும் பின்பற்றும் என்று நம்புகிறேன். பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
கேள்வி - அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஒரு பிரிவினருக்கு அமைச்சர் பதவி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?
பதில்:- யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
கேள்வி:- நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு எப்படி செயல்பட வேண்டும்?
பதில்:- நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும். அதை மீறி மத்திய அரசு அதை திணித்துக் கொண்டே வருகிறது. 22 லட்சம் மாணவர்கள் தயாரான நிலையில் கேள்வித்தாள் லீக் ஆகி அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகி உள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.
கேள்வி:- நீட் தேர்வு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக குரல் கொடுக்காமல் இருந்தவர்கள் இப்போது குரல் கொடுக்கிறார்களே?
பதில்:- அது அவர்கள் விருப்பம் . அதைப்பற்றியெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது.
கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- தி.மு.க. அணி வெற்றி பெறும்.
கேள்வி:- நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா வர உள்ளது குறித்து உங்கள் கருத்து?
பதில்:- இந்த செப்பேடுகளுக்கு எல்லாம் தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கிறது. அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்யடி கடமை மத்திய அரசுக்கு உண்டு.
கேள்வி:- மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 தருவதாக கூறினார்கள்? அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே?
பதில்:- பட்ஜெட்டுக்கு பிறகு இது குறித்து சொல்வோம் என்று ஒரு அமைச்சர் கூறி உள்ளார். பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.