சென்னை,
தமிழ்நாட்டில் மொத்தம் 4,787 டாஸ்மாக் கடைகள் இருந்தன. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகள், பார்களை மூடவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு அந்த கடைகள் மூடப்பட்டன. தற்போது அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை கட்சி நிதியாக வசூலிக்கப்பட்ட தொகை இனி அரசு கணக்கில் நேரடியாக சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் ஹாட் பெட்டிக்கு ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணம் வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம் அரசு கஜானாவிற்கு மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி கூடுதல் நிதி வருவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 88 லட்சம் முதல் 90 லட்சம் வரையிலான மதுப்பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுப்பெட்டிகள் விநியோகத்தின்போது, இதுவரை பல்வேறு நிலைகளில் முறைசாரா கட்டணங்கள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் வரை முறைகேடாக வசூலிக்கப்பட்டது தெரியவந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், ஊழலை ஒழிக்கவும் மதுவிலக்குத் துறை எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி மாற்றம் எடுக்கப்பட்டுள்ளது.