சென்னை,
அடவிநயினார் அணையில் இருந்து 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு தேவையான நீரை தற்போது நீர்த்தேக்கத்தின் இருப்பில் உள்ள மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் நீர்வரத்துபோக மீதமுள்ள நீர் அணைக்கு கீழ் உள்ள நீர்வடியும் பரப்பிலிருந்து கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டு 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, இலத்தூர், குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, அச்சன்புதூர், நெடுவயல், நயினாரகரம், கிளாங்காடு, ஆயிக்குடி, சாம்பவர் வடகரை, சுரண்டை ஆகிய கிராமங்களில் உள்ள 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.