தமிழக செய்திகள்

அரிசி, பருப்பு, சர்க்கரை இருப்புக்கு கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு!

புகார்களையும், தகவல்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை,

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாட்டு ஆணை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு, 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி / நெல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகளை நிர்ணயித்தும், இருப்பு விவரங்களை தொடர்ந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இந்த ஆணைகள், இந்திய அரசின் முன் இசைவுடன், அரசிதழ் எண்கள். 486, 487 நாள்.13.11.2026-இல் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அரசிதழின் படி சர்க்கரைக்கு மறு பதிப்பு அரசிதழ் எண் 490, நாள் 13.11.2026 -இல் வெளியிடப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள்

மாநிலத்தில் துவரம் பருப்பு, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி மற்றும் பிற பொருட்களின் விநியோகம் தடையின்றித் தொடரவும் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறது.

இந்த வரம்புகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 13.11.2026-ஆம் நாள் முதல் மூன்று மாதங்கள் வரை துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பிற்கும், 31.01.2027 வரை அரிசி மற்றும் நெல்லுக்கும் நடைமுறையில் இருக்கும். எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ கீழ்க்கண்ட வரம்புகளுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

15 நாட்களுக்கு மேல்

மேலும், இந்திய அரசு 2026 நவம்பர் 6ம் தேதி அன்று பிறப்பித்த ஆணையின்படி, ஒவ்வொரு வணிகரும், மொத்த வணிகரும், சில்லறை வணிகரும், பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனமும், ஆலை உரிமையாளரும், பதனிடுவோரும் அரிசி / நெல் இருப்பை, உணவு இருப்பு இணையதளத்தில் (foodstock.dfpd.gov.in) அறிவித்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனைப் புதுப்பிக்க வேண்டும்.

அதேபோன்று, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இருப்பையும், பருப்பு வகைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட இணையதளத்தில் (fcainfoweb.nic.in) அதே முறையில் சர்க்கரை இருப்பையும் அறிவிக்க வேண்டும். ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வரம்புக்கு மேல் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி / நெல் இருப்பை, 16.11.2026 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

சர்க்கரையைப் பொறுத்தவரை, எந்தவொரு வணிகரும் சர்க்கரை இருப்பைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் அந்தச் சர்க்கரை இருப்பைத் தன்னிடம் வைத்திருக்கக் கூடாது.

குழு அமைப்பு

இதன் மூலம் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இவற்றை கண்காணிக்கவும், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைகள், விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பபையும் ஏற்படுத்தாது. அனைத்து நுகர்வோருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதில், வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பை அரசுக்கு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உதவி எண்

புகார்களையும் தகவல்களையும் கட்டணமில்லா உதவி எண் 1967 / 1800 425 5901-க்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT