கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ப.வெங்கடரமணன், மரிய வில்சன், ரா.குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர்(பொ) வ.தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கவியரசு கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் 24.6.1927 அன்று சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டி பள்ளியில் ஆரம்பக் கல்வியும், அமராவதி புதூரில் பள்ளிப் படிப்பையும் பயின்றார்.
கவியரசு கண்ணதாசன் தனது இளமைப் பருவத்தில் எழுத்தாற்றலில் மிகுந்த ஆர்வமும், புத்தகங்களை வாசிப்பதில் அதிக நாட்டமும் கொண்டிருந்தார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவியரசு கண்ணதாசன் கம்பராமாயணம் மற்றும் பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார். திருமகள், திரைஒலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகியவை கவியரசு கண்ணதாசன் படைத்த மிகச் சிறந்த காவியங்களாகும். மேலும் 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் சிறப்பான கவிதைத் தொகுப்புகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் எழுதிய நாடகங்களில் அனார்கலி, சிவகங்கைச்சீமை, ராஜதண்டனை, அருணோதயம் ஆகியவை சிறந்தவைகளாகும். அவரின் மிகச் சிறந்த படைப்புகளான அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இவரது “அழகி” என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார்.
திரைப்படத் துறையில் தனது முதற்பாடலை ‘கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்திற்கு எழுதினார். இதனைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். 1970-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் சிறந்த பாடலாசிரியர் விருதுகளைப் பெற்றார். 1978-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞரானார். 1979-ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றார். தனது சிறப்பான பாடல்கள் மூலம் உலகிலுள்ள தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ள கவிஞர் கண்ணதாசன் மறைந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24-ம் தேதி கவியரசு கண்ணதாசனுடைய பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மணிமண்டபத்திலும் அன்னாரது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.