சென்னை,
தமிழக மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக அனல், புனல், நீர் மற்றும் கியாஸ் மின்சார நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக தற்போது 19 ஆயிரம் மெகாவாட் தேவைப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையும் 20 முதல் 22 ஆயிரம் மெகாவாட் வரை தேவைப்படும் என்பதால் தனியாரிடமும் மின்சாரம கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் திறனை எட்டுவதற்காக சூரிய மின்சார நிலையங்களை நிறுவ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ரூ.70 ஆயிரம் கோடியில் திட்டமிட்டு, அனைத்து மாவட்டங்களையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, நிலக்கரி மின்சாரத்தைக் குறைத்து, சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதம் சூரிய மின்சார உற்பத்தி 5.48 கோடி யூனிட்களைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது வெயில் அதிகரிப்பால் மின்சார நுகர்வு உச்சத்தில் இருந்தாலும், சூரிய சக்தி உற்பத்தி அதிகரிப்பு மின்சார வினியோகத்திற்கு உதவியாக உள்ளது.
இருப்பினும், அதிகரித்துவரும் சூரிய மின்சார உற்பத்தியை மின்சார கட்டமைப்பில் (கிரிட்) ஏற்பதில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், சில நேரங்களில் உற்பத்தி நிறுத்தப்படும் சவால்களும் நிலவுகின்றன என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.