சென்னை,
கடந்த மார்ச் 15-ந் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும், தி.மு.க. அரசில் முக்கிய பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவராக இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்த சாய்குமார் தலைமைச் செயலாளராக கடந்த ஏப்ரல் 8-ந் தேதி நியமிக்கப்பட்டார்.
சாய்குமார், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். 31.8.1966 அன்று பிறந்தார். மதுரை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2018-21-ம் ஆண்டுகளில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைச் செயலாளர்-1 ஆகவும் பணியாற்றியுள்ளார். வரும் ஆகஸ்டு 31-ந் தேதி சாய்குமார் பணி ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அனுமதி கிடைக்கும் நிலையில் அவர் வரும் நவம்பர் மாதம் வரை பணியில் இருப்பார். ஏற்கனவே கடந்த அரசுகளும் தங்களின் அப்போதைய தலைமைச் செயலாளர்களுக்கு 3 முதல் சில மாதங்களுக்கு பணி நீட்டிப்பை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் இது நேர்ந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் (கொரோனா காலம்) பணி ஓய்வு பெற இருந்த அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு 3 மாதங்கள் பணிநீட்டிப்பை எடப்பாடி பழனிசாமி அரசு வாங்கிக் கொடுத்தது. 2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், 2010-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை 6 மாதங்களுக்கு அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி பணி நீட்டிப்பு பெற்றார். பின்னர் அவர் மாநில தலைமை தகவல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார்.