கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள கூடாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தவெக ஆட்சிக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களும் போகப்போக படிப்பிணைகளை கற்றுக்கொள்வார்கள். காங்கிரஸ் பிரிந்து சென்றதால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மதச்சார்பின்மை காக்கப்படுகிறது என சொல்ல முடியாது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல கட்சியை சேர்ந்தவர்கள் மதச்சார்பின்மையை காத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் தவெக ஆட்சியை பிடித்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது, அவர் மனதில் இருந்து சொல்வது. அதுகுறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே அரசு, என்கிற போக்கு தமிழகத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் அவர்கள் (பாஜக) படுதோல்வியை சந்தித்துள்ளனர். கேரளாவிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. வருகிற நாட்களிலும் பாஜகவின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள கூடாது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலை கொண்டு வந்து அவர் திணிக்கிறார். தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும். பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.