தமிழக செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் பேட்டி

தமிழகத்தில் வி.சி.க.வை முழுமையாக ஏற்று கொள்ளும் காலம் வரும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

பேட்டி

தஞ்சைக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது.

உறுதி

அரசியலுக்கும், ஆட்சிக்கும் த.வெ.க.வினர் புதியவர்களாக இருந்தாலும் அவர்களுடைய சக்திக்கு ஏற்பட அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனை பாதுகாப்பதில் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றனர். தென்னிந்திய மாநிலங்களில் வி.சி.க.வின் வேர்கள் மக்களிடையே பரவி வருகிறது. இந்த இயக்கம் சமூக மாற்றத்தை படைத்தாக வேண்டும் என்ற உறுதியோடு இயங்கி வருகிறது.

அவதூறு

தமிழகத்தில் வி.சி.க.வை முழுமையாக ஏற்று கொள்ளும் காலம் வரும். நான் ஆரூடம் சொல்லவில்லை. கடந்த காலங்களில் நான் கூறியது நடந்து கொண்டே வருகின்றன. நடைமுறையில் நாம் பார்த்து கொண்டே இருக்கிறோம். நாங்கள் வெறும் பதவிக்காக, அதிகாரத்துக்காக மாறி, மாறி முடிவு எடுத்தவர்கள் இல்லை.

சாதிவாத சக்திகளையும், மதவாத சக்திகளையும் ஒருபோதும் ஊக்கப்படுத்தக்கூடாது. நமது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள், சமூக ஊடகங்களில் நமக்கு எதிரான அவதூறுகளை பரப்பலாம். அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை. மக்களுக்கான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி நாம் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT