தமிழக செய்திகள்

திருச்சி பால் பண்ணை-துவாக்குடி சர்விஸ் சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

திருச்சி பால் பண்ணை-துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி 16ம் தேதி முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் செ.ராஜ்குமார் தலைமையில் 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி அமைந்துள்ளது. தினசரி ஏற்படும் விபத்துக்கள் மூலம் உயிரிழப்பு, உடலுறுப்பு இழப்பு என்று பல்வேறு விதமான பாதிப்புகளை மக்கள் சந்திக்கும் அபாயகரமான சாலை பகுதியாக திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி அமைந்துள்ளது. ‌

மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியான பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சாலைக்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

இதற்காக உள்ளூர் மக்கள் பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் என்று அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 16.2.2026 முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் செ.ராஜ்குமார் தலைமையில் ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். மூன்றாவது நாளாக இன்று போராட்டத்தை தொடர்கின்றனர்.

மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு, மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகளில் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு முதல்-அமைச்சரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.