தமிழக செய்திகள்

கோடையை சமாளிக்க அதானி நிறுவனத்திடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு: ஒரு யூனிட் விலை ரூ.5.91

கோடை காலம் நெருங்குவதால், மின் தேவை நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தின் சராசரி மின் தேவை நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி 4,332 மெகாவாட் என்ற அளவிலேயே இருக்கிறது.

இதனால், மீதம் தேவையான 4-ல் 3 பங்கு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கும் நிலையே உள்ளது. தற்போது, கோடை காலம் நெருங்குவதால், மின் தேவை நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தமிழக அரசும் தனியாரிடம் மின்சாரம் வாங்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.91 என்ற விலையில், 5 ஆண்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு 558 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட இருக்கிறது.