கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ₹15 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தி மந்திரி சி.ஆர்.பட்டேலிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இருப்பினும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார். த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.
தமிழக அரசின் இசைவின்றி மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. காவிரி படுகையில் எந்த இடத்திலும் புதிய நீர்தேக்க திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும் தனித்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அடம் பிடித்து வரும் நிலையில், தமிழக அரசு நாளை சட்டசபையில் கொண்டு வரும் தனித்தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.