சென்னை,
பொதுமக்களுக்கு அரசு சேவை விரைந்து கிடைக்க இ-சேவையில் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவைகளை இன்னும் வேகமாகவும், எளிதாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் "வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.
இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள் நவம்பர் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய இ-சேவை தளம் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சேவைகள் குறித்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இ-சேவை இணையதளத்தை தற்போது அதிகம் பேர் ஒரே நேரத்தில் லாகின் செய்தால் சர்வர் மெதுவாக செயல்படுவதாகவும், முடங்கிவிடுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகின்றன. வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0-வில் இந்த பிரச்சினை இருக்காது. அதிவேகத்தில் சேவை கிடைக்கும்.
பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மின் கட்டணம் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் இன்னும் எளிமையாக ஒரே கிளிக்கில் கிடைக்கும்.
புதிய 2.0 தளம் முழுக்க முழுக்க செல்போன் மூலம் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இனி, கம்ப்யூட்டர் சென்டர் அல்லது இ-சேவை மையங்களை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே செல்போனில் விண்ணப்பிக்கலாம்.
ஆதார், தனிப்பட்ட விவரங்கள் ஹேக் ஆகாமல் இருக்க அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் சேர்க்கப்படுகிறது. விண்ணப்பத்தின் நிலை என்ன? எப்போது சான்றிதழ் கிடைக்கும்? என்பதை நேரடியாக எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில், கிராமத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனும் அரசு சேவையை வீட்டில் இருந்தே பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.