தமிழக செய்திகள்

மக்கள் நலத்திட்டங்கள் ஏதுமில்லாத தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: மத்திய மந்திரி எல்.முருகன் கருத்து

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் திமுக மன்னர் குடும்பத்தின் புகழ் பாடுகிறார் என மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

திமுக அரசு தனது ஆட்சிக் காலத்தின் கடைசி நாட்களில் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அரசின் இறுதி பட்ஜெட் ஆன இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை.

திமுக அரசுக்கு எதிராக மக்கள் போராடாத நாளே இல்லை. தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். மக்களின் எந்த கோரிக்கையும் முதலமைச்சருக்கோ, தமிழக நிதியமைச்சருக்கோ கேட்க வில்லை.

அரசு பணியில் சேர லஞ்சம் வாங்கி குவிக்கும் தமிழக அமைச்சர்களிடம் சிக்கி இளைஞர்கள் போராடும் அவல நிலை உள்ளது. ஆனால் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் திமுக மன்னர் குடும்பத்தின் புகழ் பாடுகிறார்.

முதலமைச்சர் மற்றும் அவரது தந்தையுமான மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வீர தீர பிரதாபங்களை தவிர பட்ஜெட் உரையில் ஏதுமில்லை.தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்.

எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? அந்த பணம் முழுவதும்எங்கே சென்றது?எந்த வளர்ச்சி பணியும் செய்யாமல், மக்களின் குரலுக்கு செவி சாய்க்காத திமுக அரசு செய்த ஒரே சாதனை, கடன் வாங்கி குவித்து தமிழகத்தை படுகுழியில் தள்ளியது மட்டும் தான். மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்தி 5 ஆண்டு காலத்தையும் திமுக அரசு கடத்தி விட்டது!

இந்த கொடூர திமுக அரசை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவது தான் இந்த அரசுக்கு மக்கள் அளிக்கும் தண்டனையாக அமையும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.