எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மகளிர் விடியல் பயணம் தொடங்கி பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் சமூகத்தின் அடித்தட்டுப் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில்கொண்டு, இத்தகைய மக்கள் நலத்திட்டங்கள் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சும் சில அரசியல் சக்திகள், அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்த திட்டங்களை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய சதித் திட்டங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தற்போது ஒரு இமாலய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு நிதியாக கூடுதலாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஏழை எளிய பெண்களின் வயிற்றில் அடிக்க நினைத்தவர்களுக்கு விடுக்கப்பட்ட தகுந்த எச்சரிக்கையாகவும், சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.
முக்கியமாக மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்றவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அதிரடி முடிவை மேற்கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை மிகவும் துணிச்சலானது, பாராட்டத்தக்கது.
மக்களுக்கு நேரடியாகப் பலன் தரும் திட்டங்களை முடக்க நினைப்பவர்களின் கனவை இந்த அறிவிப்பு சிதறடித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தத் துணிச்சலான முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மனதார வரவேற்கிறேன். அரசியல் ஆதாயங்களுக்காக ஏழை மக்களின் நலத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த முயல்பவர்களுக்கு இது ஒரு பாடம். மக்கள் நலனைப் பாதுகாப்பதில் அரசு காட்டும் இந்த உறுதி பாராட்டுதலுக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.