தமிழக செய்திகள்

தமிழ்நாடு கிராம வங்கியின் நிகர லாபம் ரூ.622.79 கோடியாக உயர்வு - மணி சுப்ரமணியன்

2025-2026-ம் நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.57,966.14 கோடியாக உயர்ந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

சேலம்,

தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவை 2019-ம் ஆண்டு இணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கிராம வங்கி தனது 7-வது நிதியாண்டான 2025-2026-ம் ஆண்டில் அனைத்து முக்கிய வணிக குறியீடுகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கி

சேலத்தை தலைமையிடமாக கொண்டு இந்தியன் வங்கியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கி. சென்னை தவிர தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் அமைந்துள்ள 699 கிளைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. 2025-2026-ம் நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.57,966.14 கோடியாக உயர்ந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வைப்புத் தொகை ரூ.26,231.52 கோடியாகவும், கடன் நிலுவை ரூ.31,734.62 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வளர்ச்சி

வங்கியின் செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டின் ரூ.730.93 கோடியில் இருந்து ரூ.1,052.74 கோடியாக உயர்ந்து 44.03 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், நிகர லாபம் ரூ.367.39 கோடியில் இருந்து ரூ.622.79 கோடியாக உயர்ந்து 69.52 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. வங்கியின் மூலதன வலிமையை வெளிப்படுத்தும் மூலதன போதிய விகிதம் 13.34 சதவீதமாக உள்ளது.

கடன்கள்

அனைத்து மக்களுக்கான ஒருங்கிணைந்த நிதி சேவைகளை வழங்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளை தமிழ்நாடு கிராம வங்கி விரிவுப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த கடன்கள், தொழில் முனைவோருக்கான தொழிற்கடன், வீட்டுக்கடன், வாகன கடன், அடமான கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.